புதிய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவாக துருக்கியர்கள் வாக்களிப்பு

This is the stable version, checked on 13 செப்டெம்பர் 2010. Template changes await review.

திங்கள், செப்டம்பர் 13, 2010

துருக்கியின் இராணுவக் கால அரசியலமைப்புக்கு முக்கிய திருத்தங்களைக் கொண்டு வர நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான துருக்கியர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இம்மாற்றங்களின் மூலம் துருக்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகௌக்கு மிக நெருங்கி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


99 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 58 விழுக்காட்டினர் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு அடுத்த கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கூடிய பெரும்பாலான திருத்தங்கள் உள்ளடங்கலாக 26 புதிய சீர்திருத்தங்களுக்கு துருக்கி மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.


"மக்களாட்சிக்கான பாதை இதன் மூலம் திறக்கப்பட்டுள்ளது," என பிரதமர் எர்துகான் தெரிவித்தார். அரசியல் திருத்தங்கள் வெற்றியடைந்ததையிட்டு ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.


இதற்கிடையில், அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இரண்டு பிரதான நீதித்துறை நிறுவனங்களின் உறுப்புரிமையை விரிவு படுத்தும் இரண்டு அரசியல் திருத்தங்கள், அரசாங்கம் நீதித்துறையில் அளவு கடந்து செல்வாக்கு செலுத்துவதற்கு வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.


துருக்கியின் தென்கிழக்கில் அரசுக்கெதிராக ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் குர்தியத் தலைவர்கள் இவ்வாக்கெடுப்பைப் புறக்கணிக்குமாறு குர்தியர்களைக் கேட்டுக் கொண்டதன் பேரில் கிழக்கு மாகாணங்களில் பலர் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.

மூலம்

தொகு