புகைக் குண்டுவீச்சை அடுத்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சனவரி 19, 2012

அமெரிக்காவின் அரசுத் தலைவர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நேற்றுத் திடீரென புகை கிளம்பியதால் பாதுகாப்பு காரணமாக வெள்ளை மாளிகை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது. இந்த புகை வெள்ளை மாளிகை சுற்றுச் சுவர் அருகேயிருந்து கிளம்பியது.


வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள சாலையில் ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி ஒன்று நடைபெற்றபோது புகை குண்டு வீசப்பட்டதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது.


அமெரிக்கா அரசியலில் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, "வால்ஸ்ட்ரீட் போராட்டம்' கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கியது. தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே, இப்போராட்டம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களாக நடைபெற்று வருகின்றன.


இந் நிலையில் நேற்று வெள்ளை மாளிகையின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெள்ளை மாளிகையின் சுற்றுச் சுவரை ஒட்டிய உள் பகுதியில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் உளவுப் பிரிவினரும் அங்கு விரைந்து சோதனையிட்டபோது யாரோ புகைக்குண்டை உள்ளே வீசியது தெரியவந்தது.


குண்டு உடனடியாக அகற்றப்பட்டாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாளிகையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. மாளிகையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அமைதியான முறையில் கலைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த போது, அதிபர் ஒபாமாவும், அவரின் மனைவி மிச்சேலும் மாளிகையில் இருக்கவில்லை. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என, வெள்ளை மாளிகை பாதுகாப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.


மூலம்

தொகு