பிலிப்பைன்சில் சுற்றுலாப் பணயக்கைதிகள் 8 பேர் சுட்டுக்கொலை
புதன், ஆகத்து 25, 2010
- 9 ஏப்பிரல் 2015: பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை
- 10 நவம்பர் 2013: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு
- 15 அக்டோபர் 2013: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
- 7 மே 2013: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு
- 28 ஏப்பிரல் 2013: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
பிலிப்பைன்சில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து ஒன்றைக் கடத்தி பயணிகளை பணயக் கைதிகளாக்கிய நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். 8 பயணிகள் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பயணிகளை ஏற்றிச் சென்ற இந்தத் தொடருந்தை ரொலாண்டோ என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி சென்ற திங்கட்கிழமையன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றார். இச்செய்தி காவல்துறையினருக்குக் கிடைத்தவுடன் அவர்கள் தீயணைக்கும் வண்டிகள், மற்றும் அவசர மருத்துவ வண்டிகளுடன் அவ்விடத்தைச் சுற்றி வளைத்தனர்.
பேச்சுகளினூடாக 9 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து பேருந்தின் சாரதி தப்பியோடியதைத் தொடர்ந்து ரோலன்டோ சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தாக்குதலை ஆரம்பித்த காவல்துறையினர் ரோலன்டோவைச் சுட்டுக் கொன்றனர். இறந்தவர்களில் மூவர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமானோர் ஹொங்கொங்கைச் சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பதவி நீக்கப்பட்டிருந்த ரொலாண்டோ தனது பதவியை மீள வழங்குமாறு கோரியே அவர்களைப் பணயம் வைத்தார்.
கடத்தல் நாடகம் ஆரம்பித்து பலமணி நேரம் கடந்த பின்னரும் ஒருவரும் உதவிக்கு வராதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள இச் சம்பவத்தில் உயிர்பிழைத்த பெண் பயணியொருவர் ஏனைய பயணிகளை துப்பாக்கிதாரி சுடுவதைத் தடுக்க முயன்ற தனது கணவர் இச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சில் தனது 8 சுற்றுலாப் பயணிகளினதும் படுகொலை தொடர்பில் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள ஹொங்கொங் அந்நாட்டுக்கான அனைத்துப் போக்குவரத்துகளையும் இரத்துச் செய்துள்ளது. இச் சம்பவம் குறித்த முழு விசாரணைகளையும் மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதற்கான பதிலை வழங்குவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்கீனோ உறுதியளித்துள்ளார்.
இச் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் கையாண்ட விதம் தொடர்பில் உயிர்பிழைத்தவர்களும் நிபுணர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 காவல்துறையினர் தமது பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மூலம்
தொகு- Manila police admit bungling deadly bus siege, பிபிசி, ஆகத்து 24, 2010
- பணயக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் 8 பேர் சுட்டுக்கொலை, தினக்குரல், ஆகத்து 25, 2010
- Manila hostage rescuers suspended, அல்ஜசீரா, ஆகத்து 25. 2010