பிரேசிலில் ஐநூறுக்கும் அதிகமான இறந்த பென்குயின்கள் கரையொதுங்கின

சனி, சூலை 14, 2012

தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தெற்கே ரியோ கிராண்ட் டோ சுல் மாநிலக் கரைகளில் 500 இற்கும் அதிகமான பென்குயின்கள் இறந்து கிடக்கக் காணப்பட்டதை அடுத்து இது குறித்தான விசாரணைகளை பிரேசில் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.


அர்ஜெண்டீனாவில் மகெலெனிய பென்குயின்கள்

இறந்த பென்குயின்களின் 30 மாதிரிகள் போர்ட்டோ அலெக்ரி பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இறந்த பென்குயின்கள அனைத்தும் நன்றாக உணவுண்டுள்ளதாகவும், அவற்றின் உடல்களில் காயங்களோ அல்லது எண்ணெய்த்தன்மையோ எதுவும் இருக்கவில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை எவ்வாறு இறந்தன என்பது ஆச்சரியமடைய வைக்கின்றது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


மகெலனியப் பென்குயின்கள் என அழைக்கப்படும் இவ்வகைப் பறவைகள் தெற்கு அர்ஜெண்டீனா மற்றும் சிலி ஆகியவற்றிற்கு இடையில் உள்ள பட்டகோனியாப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. இவை வழக்கமாக மார்ச் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே தெற்குக் குளிர் காலங்களின் போது இடம்பெயர்ந்து பிரேசில் வரை செல்கின்றன. அண்டார்க்ட்டிக் வட்டத்தில் இருந்தும் பென்குயின்கள் இங்கு வருகின்றன. இவை பொதுவாக சிறிய வகை மீன்களையே உண்கின்றன. தெற்குப் பகுதியின் கடல் சிங்கங்களே இவற்றின் முக்கிய எதிரிகளாகும்.


கடந்த வாரம் ரியோ டி ஜெனெய்ரோ கடற்கரைகளில் இருந்து பத்துக்கும் அதிகமான பென்குயின்கள் மீட்கப்பட்டன. இவை தமது வழக்கமான எல்லைகளைத் தாண்டி வந்தவை ஆகும். இவற்றை மீண்டும் தென் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு பிரேசில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


மூலம் தொகு