பிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம்

செவ்வாய், திசம்பர் 29, 2009


போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதான பிரித்தானிய நபர் ஒருவருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.


லண்டனைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய அக்மல் ஷைக் என்பவர் தான் எக்குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது குடும்பம் தெரிவித்திருந்தது.


அக்மலுக்கு மன்னிப்பு வழங்கும்படி அக்மலின் குடும்பமும், பிரித்தானிய அரசும் பலமுறை கேட்டிருந்தும் சீன அரசு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.


பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன், "தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத்" தெரிவித்தார். ஆனாலும் சீனத் தூதுவர், "திரு அக்மல் முன்னர் மனநிலை பாதிக்கப்பட்டதாக எங்கும் பதியப்பட்டிருக்கவில்லை," எனத் தெரிவித்தார்.


பாகிஸ்தானில் பிறந்த அக்மல் குழந்தைப் பருவத்தில் பிரிட்டனில் குடியேறினார். உர்முக் இனத்தைச் சேர்ந்த இவர் மீது சீனா நடந்து கொண்ட முறையால் இரு நாடுகளிடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.


செப்டம்பர் 2007 இல் வட-மேற்கு சீனாவின் உருமுச்சி நகரில் 4 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் அடங்கிய பையுடன் அக்மல் கைது செய்யப்பட்டிருந்தார்.


சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்பு சீனாவில் மரணதண்டனை பெற்ற முதலாவது ஐரோப்பிய ஒன்றிய நபர் அக்மல் ஆவார்.

மூலம் தொகு