பிஜியின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்திரி கைதானார்

ஞாயிறு, அக்டோபர் 3, 2010

இராணுவ ஆட்சியாளரின் அவசரகால விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக பிஜியின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்திரி கைது செய்யப்பட்டார்.


பிஜியின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் மகேந்திர சவுத்திரி, வேறும் ஐந்து பேரும் விதிகளை மீறிப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டனர். இந்த அவசரகால விதிகள் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாளை திங்கட்கிழமை இவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் என நம்பப்படுகிறது.


மகேந்திர சவுத்திரியின் அரசு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து கலைக்கப்பட்டது.


ரக்கிராக்கி என்ற இடத்தில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுடன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்தே சவுத்திரி கைதானார். பிஜியின் சர்க்கரை ஆலை தொழில் இராணுவ ஆட்சியாளருக்கு தலையிடியைக் கொடுக்கும் ஒரு துறையாகும். சர்க்கரை உற்பத்தியை நவீனமயப் படுத்த இராணுவ ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. இதனால் பெருமளவு பொருள் இழப்பு ஏற்பட்டது.


தொழிற்கட்சி 1999 பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, சவுத்திரி பிஜியின் முதலாவது இந்திய இனப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டின் பின்னர் பிரபல தொழிலதிபரும், தேசியவாதியுமான ஜோர்ஜ் ஸ்பைட், இளைப்பாறிய இராணுவ மேஜர் இலிசோனி லிகாயிரி ஆகியோர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு சவுத்திரி மற்றும் அவரது அமைச்சரவையினரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர். ஸ்பைட் பதில் பிரதமராகத் தன்னை அறிவித்தார். இதனை அடுத்து பிஜி அதிபர் சவுத்திரியையும் அவரது அமைச்சரவையையும் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.


2006 ஆம் ஆண்டில் இராணுவத்தினர் மேஜர் பைனிமராமா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கு ஊடகத் தணிக்கை அமுல் படுத்தப்பட்டு, அரசியல் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன.

மூலம்