பாலியல் நோய் சோதனை தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக குவாத்தமாலா வழக்கு

செவ்வாய், மார்ச்சு 15, 2011

1940களில் வலுக்கட்டாயமாக சிபிலிசு எனப்படும் பாலியல் நோய்க் கிருமிகள் செலுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்ட குவாத்தமாலர்கள் பலர் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக நட்டஈடு கோரி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


சிபிலிசுவைப் பரப்பும் திரெப்போனிமா பல்லிடம் என்ற பாக்டீரியா

நூற்றுக்கணக்கான குவாத்தமாலா சிறைக்கைதிகள், மனநோயாளர்கள், மற்றும் அனாதைகளுக்கு பென்சிலின் மருந்தைப் பரிசோதிப்பதற்காக சிபிலிசு நோய்க்கிருமிகள் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.


கடந்த ஆண்டு "கண்டிக்கத்தக்க" இச்சோதனைகள் குறித்து ஐக்கிய அமெரிக்கா மன்னிப்புக் கோரியிருந்தது. ஆனாலும், நீதிமன்றத்துக்கு வெளியே இது குறித்து உடன்பாட்டுக்கு வருவதற்கு ஒபாமா நிர்வாகம் இதுவரை தமக்கு எப்பதிலும் தெரிவிக்கவில்லை என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.


பல தசாப்தங்களாக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இச்சோதனை குறித்த ஆவணங்கள் கடந்த ஆண்டில் வெலெஸ்லி கல்லூரிப் பேராசிரியர் சூசன் ரெவெர்பி என்ற மருத்துவ வரலாற்றாளரால் வெளியிடப்பட்டது. 1946 முதல் 1948 வரையான காலப்பகுதியில் அமெரிக்க அறிவியலாளர்களால் குவாத்தமாலாவில் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


அந்நாளைய குவாத்தமாலா அரசு இச்சோதனைகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது என பேராசிரியை ரெவெர்பி தெரிவித்தார்.


மருத்துவத் தாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்கள் மூலம் நோய்க்கிருமிகள் சிறைக்கைதிகளுக்குச் செலுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சிபிலிசு நோய் தொற்றிய விபச்சாரிகளுடன் உறவு கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.


இச்சோதனைகள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல் என தற்போதைய குவாத்தமாலா அரசுத்தலைவர் அல்வேரோ கொலொம் தெரிவித்துள்ளார்.


மூலம் தொகு