பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்
புதன், மே 15, 2013
- 9 ஏப்பிரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது
- 6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு
- 29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு
- 24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்
- 15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்
விடுதலை வீரரும் முன்னாள் பிரதமருமான பத்திரிசு லுமும்பாவின் நினைவாக நகரம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக கொங்கோ சனநாயகக் குடியரசு அறிவித்துள்ளது.
கொங்கோ சனநாயகக் குடியரசின் மத்திய பகுதியில் பத்திரிசு லுமும்பா பிறந்த காசாய்-ஓரியெண்டல் மாகாணத்தில் லுமும்பாவில் என்ற பெயரில் இந்நகரம் நிறுவப்பட விருப்பதாக அரசுப் பேச்சாளர் லாம்பர்ட் மெண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கான நிர்மாணப் பணிகள் 2014 இல் ஆரம்பமாகும்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக பெல்ஜியத்தின் குடியேற்ற ஆட்சியில் இருந்த கொங்கோ பிரதமராக 1960 ஆம் ஆண்டில் லுமும்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சோவியத் நாட்டின் நண்பராக இருந்தவர். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இரஉ போது இவருக்கு வயது 35 ஆகும். இவரது படுகொலைக்கு ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியத்தின் புலனாய்வு அமைப்புகளுமே காரணம் எனப் பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
லுமும்பாவின் படுகொலையில் ஐக்கிய இராச்சியம் சம்பந்தப்பட்டிருந்ததாக டாஃப்னி பார்க் எனும் முன்னாள் இரகசியப் புலனாய்வுத்துறை அதிகாரி தம்மிடம் கூறியதாக ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லீ பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.
பத்திரிசு எமெரி லுமும்பா (1925–1961) கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆவார். இவரே பெல்சியத்திடம் இருந்து தமது நாட்டுக்கு ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
தனது தந்தையின் நினைவாகப் புதிய நகரம் அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள அவரது மகன் லோரண்ட், தனது தந்தையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது எனபதை அரசு கண்டுபிடிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
1960 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த காலம் தொடக்கம் கொங்கோ மக்களாட்சிக் குடியரசு பல அரசியல், மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு உள்ளானது. கடந்த ஆண்டில் எம்23 என்ற கிளர்ச்சிக் குழுவினரின் ஆயுத நடவடிக்கைகளால் நாட்டின் கிழக்குப் பகுதியில் 800,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
மூலம்
தொகு- DR Congo to build town in honour of Patrice Lumumba, பிபிசி, மே 14, 2013
- Congo to create city of Lumumbaville in honor of liberation symbol Patrice Lumumba, பொக்சு செய்திகள், மே 14, 2013