நைஜீரிய விமான விபத்தில் 153 பேர் உயிரிழப்பு

திங்கள், சூன் 4, 2012

153 பேருடன் பறந்து கொண்டிருந்த விமானமொன்று நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியருக்குச் சொந்தாமான டானா ஏர் நிறுவனத்தின் போயிங் எம்டி-83 என்ற இவ்விமானம், முர்த்தாலா முகமது பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் மின்சார கம்பியொன்றில் மோதியபின் இரு மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டிடமொன்றின் மீது மோதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபுஜா நகருக்கும் லாகோஸ் நகருக்கும் இடையில் பயணித்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையில் இருந்தவர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று விடுமுறை நாளாகையால் கட்டடத்தில் எவரும் தங்கியிருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இறந்தவர்களின் விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.


விமானத்திலிருந்து எவரும் உயிர் தப்பியிருப்பார்கள் என தான் நம்பவில்லை என நைஜீரிய சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஹரோல்ட் டெனூரன் தெரிவித்துள்ளார். பயணிகளில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள் ஆவர். ஆறு சீனப் பயணிகளும் இறந்துள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.


இவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நைஜீரியாவின் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் தெரிவித்துள்ளார்.


மூலம் தொகு