நைஜீரியா குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு
சனி, திசம்பர் 25, 2010
- 2 அக்டோபர் 2016: 123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 12 மே 2014: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்
- 18 ஏப்பிரல் 2014: நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்
- 26 பெப்பிரவரி 2014: நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஜோஸ் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மேலும் பல குண்டுவெடிப்புகள் நகரில் இடம்பெற்றதாகவும் 20 பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இச்செய்தியை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. பாதுகாப்புப் படையினர் இப்பகுதியில் தற்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இவ்வாண்டு மட்டும் இப்பகுதியில் இடம்பெற்ற இன மோதல்களில் ஆயிக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதிக்கும், கிறித்தவர்கள் வாழும் தெற்குப் பகுதிக்கும் எல்லைப்பகுதியில் ஜோஸ் நகரம் உள்ளது. இப்பகுதியில் இடம்பெறும் மோதல்கள் பெரும்பாலும் இன மோதல்கள் என அதிகாரிகள் தெரிவித்தாலும், இம்மோதல்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளே காரணம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு வாழும் முஸ்லிம்கள் பொதுவாக ஹவுசா அல்லது ஃபுலானி மொழி பேசுபவர்கள். இவர்கள் கால்நடை வளர்த்தல், மற்றும் சிறு வணிகத் தொழில்களையே மேற்கொள்ளுகின்றனர். பெரோம், அனகூட்டா, அபிசாரி ஆகிய கிறித்தவ இனத்தவர்கள் பொதுவாக வேளாண்மைத் தொழிலைச் செய்து வருகின்றனர். ஹவுசா முஸ்லிம்கள் வடக்கில் இருந்து கால்நடைத் தீவனங்களைத் தேடி தமது வேளாண்மை நிலங்களுக்கு வருவதால், அவர்களால் தமக்கு எப்போதும் ஆபத்தே என சில கிறித்தவ விவசாயிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், வேறொரு சம்பவத்தில், இசுலாமியத் தீவிரவாதக் குழு ஒன்று மைடூகுரி என்ற நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிறித்துமசு ஆராதனைக்காகக் கூடியிருந்தோர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார். எவரும் காயமடையவில்லை.
மூலம்
தொகு- Deadly blast near Nigeria's flashpoint city of Jos, பிபிசி, டிசம்பர் 24, 2010
- Blast in Nigerian flashpoint city kills at least 8: police, ஏஎஃப்பி, டிசம்பர் 24, 2010