நைஜீரியாவில் ஐநா கட்டடத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு

சனி, ஆகத்து 27, 2011

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் தற்கொலைக் வாகனக் குண்டு வெடித்ததில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். சக்தி வாய்ந்த இக்குண்டுவெடிப்பில் ஐநா கட்டடத்தின் கீழ் மாடிகள் அனைத்தும் பலத்த சேதத்துக்குள்ளாயுள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளனர்.


இத்தாக்குதலைத் தாமே நடத்தியதாக போக்கோ ஹரம் என்ற இசுலாமியப் போராளிக் குழுவின் பேச்சாளர் ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் ஷரியா என்ற இசுலாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே தமது குழு போராடுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இரண்டு பாதுகாப்புக் கடவைகளை இடித்துக் கொண்டு சென்ற வாகனம் கட்டத்தின் முன்பகுதியத் தாக்கி வெடித்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர். நைஜீரியாவில் உள்ள ஐநா கட்டடத்தில் மனிதநேய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும் 26 நிறுவனங்கள் தமது அலுவலகங்களை வைத்துள்ளன. கிட்டத்தட்ட 400 ஐநா ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். காலை 11:00 மணியலவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது கட்டடத்தில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள் போன்ற விபரங்கள் தெரிய வரவில்லை.


போக்கோ ஹராம் அமைப்புக்கும் வடக்கு ஆப்பிரிக்காவில் செயல்படும் அல்-கைதா அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் சென்ற மாதம் கருத்துத் தெரிவித்திருந்தார்.


மூலம் தொகு