நைஜீரியாவில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 150 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, சனவரி 22, 2012

கடந்த வெள்ளிக்கிழமை நைஜீரியாவின் வடக்கே கானோ என்ற நகரில் இசுலாமியப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 150 பேர் வரை கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நகரில் உள்ள காவல்துறை அலுவலகங்கள், கடவுச்சீட்டு மற்றும் குடியகல்வுத்துறைக் கட்டடங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 24-மணி நேர ஊரடங்கு நகரில் அமுலில் உள்ளது.


2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போக்கோ ஹராம் என்ற போராளிகள் அமைப்பு இத்தாக்குதல்களைத் தாமே நடத்தியதாக அறிவித்துள்ளது. நைஜீரிய அரசைக் கவிழ்த்து இசுலாமிய நாடாக்குவதே தமது நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அரசுக் கட்டிடங்களை மட்டுமல்லாமல் இவர்கள அண்மைக் காலத்தில் கிறித்தவக் கோயில்களையும் தாக்கி நூற்றுக்கணக்கான கிறித்தவர்கள், மற்றும் முஸ்லிம்களையும் கொன்றிருக்கின்றனர். வடக்கு நைஜீரியாவில் முஸ்லிம்களும், தெற்கே கிறித்தவர்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.


வெள்ளிக்கிழமைத் தாக்குதலில் காயமடைந்தோரில் இந்தியர்களும், லெபனானியர்களும் அடங்குவர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


மூலம் தொகு