நைஜீரியத் தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள், பலர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், திசம்பர் 26, 2011

நைஜீரியாவின் பல நகரங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இசுலாமியத் தீவிரவாதக் குழுவான போகோ அராம் அமைப்பு அறிவித்துள்ளது.


தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல்களை அடுத்து நாடே சோகத்தில் மூழ்கியது.


நாட்டின் வடக்குப் பகுதி நகரான மடல்லாவுக்கு அருகில் உள்ள புனித தெரேசா தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு முதலில் வெடித்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போகோ ஹரம் தீவிரவாதிகள், தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.


இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் மத்திய நகரான ஜொஸ்ஸில் நடந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். சிலர் காயமடைந்தனர்.


இவ்விரு குண்டுவெடிப்புகள் நடந்த அதேவேளையில் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சில நகரங்களில் போகோ ஹரம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களைப் பாதுகாப்பு வீரர்கள் திருப்பித் தாக்கியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வடக்குப் பகுதியில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடி வரும் போகோ ஹரம் என்ற அமைப்பினர் தொடர்ந்து பொதுமக்களையும், பாதுகாப்பு வீரர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி அஜுபுகே கூறினார்.


இதற்கிடையே சிறுவர், சிறுமியர் தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தாமே நேரடியாக பன்னாட்டு அமைப்புகளிடம் புகார் செய்வதற்கு வழி செய்யும் ஏற்பாடு ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


மூலம்

தொகு