நைஜீரியத் தலைநகரில் காவல்துறைத் தலைமையகம் போராளிகளால் தாக்கப்பட்டது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், நவம்பர் 26, 2012

நைஜீரியாவின் தலைநகர் ஆபுஜாவில் காவல்துறைத் தலைமையம் ஒன்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போக்கோ ஹராம் இசுலாமியத் தீவிரவாதிகள் பலர் இக்கட்டடத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.


தடுப்புக் காவலில் உள்ள சிலர் வெளியேறியுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டடத்தைச் சுற்றி பல அரசு செயலகங்கள் உள்ளதால் இப்பகுதிக்கு வழக்கமாக உயர்மட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது.


இத்தாக்குதலுக்கு எந்தக் குழுவு இதுவரை பொறுப்பேற்காவிடினும், போக்கோ ஹராம் போராளிகளே இதனை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.


நைஜீரியாவில் இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வர இக்குழு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி வருகிறது. இவ்வாண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.


கடூனா மாநிலத்தில் இராணுவ நிலைகளுக்குள்ளே அமைந்திருந்த கிறித்தவக் கோயில் ஒன்றில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


மூலம்

தொகு