நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது சந்திரயான்-1

வியாழன், செப்டம்பர் 24, 2009

நிலா


கடந்த ஆண்டு நிலவுக்கு இந்தியாவின் இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலவில் தண்ணீர், அல்லது அதன் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதார புகைப்படத்தை எடுத்துள்ளது. இதனை சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை மயில்சாமி தெரிவித்துள்ளார்.


நிலவின் மேற்பரப்பில் மிக மெலிதான படுகையாக தண்ணீரின் வேதிக்கூறுகள் இருப்பதை சந்திரயானின் பொருத்தப்பட்டிருந்த நாசாவின் "மூன் மினரலாஜி மேப்பர்" கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பல பத்தாண்டுகளுக்கு முன்னால் அப்போலோ விண்வெளிப் பயணத்தின் பொழுது நிலாவின் பரப்பில் இருந்து பூமிக்கு எடுத்துவந்த நிலாமண்ணில் நீர் ஏதும் இருப்பதாக உறுதி செய்ய இயலவில்லை. ஆனால் இப்பொழுது நிலவின் மேற்பாகத்தில் இருக்கும் பாறைகளிலும், அங்குள்ள தூசுகளிலும் நீர் மூலக்கூறுகள் இருப்பதை இந்திய செயற்கைத் துணைக்கோள் உறுதி செய்துள்ளது.


நிலவின் புதிர்களை நாம் இப்போது விடுவித்து வருகிறோம். அவை இப்போது உண்மையிலேயே எமது கொல்லைப்புறத்துக்கு வந்து விட்டன.

—முனைவர் ஜிம் கார்வின், நாசா

இப்பொழுது "அமெரிக்காவின் ஆழ மோதும் துழாவி" (US Deep impact probe) என்னும் செயற்கைத் துணைக்கோளும், அமெரிக்க-ஐரோப்பிய காசினி விண்கலமும் (US-European Cassini spacecraft), சந்திரயான் செய்த கண்டுபிடிப்பை உறுதி செய்கின்றது. ஒரு கன மீட்டர் நிலாமண்ணில் ஏறாத்தாழ ஒரு லிட்டர் நீர் இருக்கும் என்று லாரி டெய்லர் என்னும் அமெரிக்க நிலா ஆய்வாளர் கூறுகின்றார்.


இக்கண்டுபிடிப்பின் விளைவாக விண்வெளிப் பயணிகள் இந்த நீரைப் பிரித்து எறிக்ணை எரிபொருள் (rocket fuel) செய்ய இயலும் என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் நிலவில் வாழ்விடங்களை அமைக்கக் கூடிய சாத்தியக் கூறுக்களை அதிகரிக்கச் செய்யும் என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


நிலவின் துருவப் பகுதியில் பனிக்கட்டி இருக்கும் என்று விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் நம்பியிருந்தாலும், நிலவை ஆராய சமீபத்தில் ஏவப்பட்ட மூன்று கோள்கள், இது தொடர்பிலான விபரங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன. நிலாவின் மேற்பரப்பில் நீர் பரவிக் கிடப்பதை இவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப் பரவிக் கிடக்கும் தண்ணீரை, பூமியில் இருப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


மூலம் தொகு