நியூட்ரினோக்களின் வேகத்தைத் தவறாகக் கணக்கிட்ட அறிவியலாளர் பதவி துறந்தார்

சனி, மார்ச்சு 31, 2012

அடிப்படைத் துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லுகின்றன எனத் தவறாகக் கணக்கிட்டு அறிவித்த அறிவியலாளர் குழுவின் தலைவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


ஒளியை விட எந்தப் பொருளும் வேகமாகச் செல்லாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கொள்கையைப் பிழை என அறிவித்த பரிசோதனைக்கு பேராசிரியர் அந்தோனியோ எரெடிட்டாட்டோ தலைமை வகித்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்தாலியில் உள்ள கிரா சாசோ என்ற நிலத்தடி ஆய்வுகூடத்தின் ஒப்பேரா பிரிவு நடத்திய சோதனை முடிவுகள் நியூட்ரினோக்கள் ஒளியை மிஞ்சிய வேகத்தில் செல்வதாகக் கூறப்பட்டது. ஒப்பேரா பிரிவின் ஆய்வு முடிவுகளுக்கு பல எதிர்ப்புகள் அப்போது எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும்.


இரு வாரங்களுக்கு முன்னர் இதே ஆய்வுகூடத்தில் வேறொரு குழுவினால் நடத்தப்பட்ட பரிசோதனைகள் நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்திலேயே செல்லுகின்றன என நிரூபித்திருந்தது. நியூட்ரினோக்களின் வேகத்தைத் தவறாக கணக்கிட்ட ஒப்பேரா குழுவின் சில அங்கத்தவர்கள் தமது தலைவரைப் பதவியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தினர் எனப் பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூலம்

தொகு