நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, மார்ச்சு 17, 2012

நியூட்ரினோக்கள் எனப்படும் அடிப்படைத்துகள்களின் வேகம் குறித்து மீது நடத்தப்பட்ட மீள்பரிசோதனைகள் அவை ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை என நிரூபித்திருக்கின்றன.


கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் நியூட்ரினோக்கள் ஒளியை மிஞ்சிய வேகத்தில் செல்வதாகக் கூறப்பட்டது. இத்தாலியில் உள்ள கிரா சாசோ என்ற நிலத்தடி ஆய்வுகூடத்தின் ஒப்பேரா பிரிவு இந்த ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். சார்புக் கோட்பாட்டின் படி ஒளியின் வேகமே இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய மிகக்கூடிய வேகமாகும்.


அதே ஆய்வுகூடத்தில் இக்காரசு என்ற வேறொரு பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்ட மீள்பரிசோதனைகள் நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்திலேயே செல்லுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய முடிவுகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.


செனீவாவில் அமைத்துள்ள செர்ன் எனப்படும் அணு ஆய்வுக்கான ஐரோப்பிய ஆய்வுகூடத் வேகமுடுக்கியில் இருந்து 730 கிமீ தூரத்திற்கு செலுத்தப்பட்ட நியூட்ரினோக்களைக் கண்டறிய 600 தொன்கள் (430,000 லீட்டர்கள்) திரவ ஆர்கன் இக்காரசு குழுவினரின் இந்தப் பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டது.


"பாடசாலைகளில் படித்த ஒளியின் வேகத்திலேயே நாம் நிற்கிறோம்," என இக்காரசு ஆய்வுக்குழுவின் பேச்சாளர் சாண்ட்ரோ செண்ட்ரோ தெரிவித்தார். இந்த முடிவுகள் எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என அவர் கூறினார்.


நியூட்ரினோக்களின் வேகம் குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் முகமாக மேலும் தனிப்பட்ட பரிசோதனைகள் சிலவற்றை இம்மாத இறுதியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு