நியூட்டனின் 'ஆப்பிள் கதை'யின் மூலப் பிரதி இணையத்தில் வெளியிடப்பட்டது

செவ்வாய், சனவரி 19, 2010



சேர் ஐசாக் நியூட்டனின் ஆப்பிள் விழும் கதையின் மூலக் கையெழுத்துப் பிரதி இணையத்தில் பொது மக்களின் பார்வைக்கு முதற்தடவையாக வெளியிடப்பட்டது.


சேர் ஐசாக் நியூட்டன்
வில்லியம் ஸ்டூக்லி

நியூட்டனின் நண்பரூம் அறிவியலாளருமான வில்லியம் ஸ்டூக்லீ நியூட்டனின் அனுபவத்தை அவரிடமே நேரடியாகக் கேட்டு குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். 1752 ஆம் ஆண்டில் ஸ்டூக்லி தனது வரலாற்றுக் குறிப்பிலும், ஐசாக் நியூட்டனின் வாழ்க்கைக் குறிப்பிலும் இவற்றைப் பதித்துள்ளார்.


ஐக்கிய இராச்சியத்தின் "ரோயல் சபை" (Royal Society) இப்போது இந்தக் குறிப்புகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலத்திரனியல் புத்தகமாக மாற்றி இணைய இணைப்பு உள்ளவர்கள் எவரும் படிக்கு படி வெளியிட்டுள்ளது.


ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுவதைக் கண்டபோது, அந்நிகழ்வு மூலம் ஈர்க்கப்பட்ட நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையை ஆராய ஆரம்பித்தார் என்று கூறுகிறது கதை.


"மூலக் கையெழுத்துப் பிரதியைப் பார்ப்பது வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்" என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் வரலாற்றாய்வாளருமான மார்ட்டின் கெம்ப் கருத்துத் தெரிவித்தார்.


"ஆப்பிள் நியூட்டனின் தலையில் வீழ்ந்தது என்பதை நாம் நம்பத் தேவையில்லை, ஆனாலும் மரத்தின் கீழ் இருந்து ஆப்பிள் விழுவதை அவதானித்து அதன் மூலம் அவர் ஈர்க்கப்பட்டு தனது ஆய்வைத் தொடங்கினார்".


நியூட்டனுக்கும் ஸ்டூக்லிக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றல் மூலம் விளைந்தது..நியூட்டனும் ஆப்பிளும் கதை.

—மார்ட்டின் கெம்ப், வரலாற்றாய்வாளர்

ரோயல் சபையின் தலைவர் ரீஸ் பிரபு கருத்துத் தெரிவிக்கையில், "இணையப் பாவனையாளர்கள் தமது கைகளில் மூலப் பிரதியை வைத்து வாசிப்பது போலப் பிரமையை இத்தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது" என்றார்.


நியூட்டன் பேசிய வார்த்தைகள் எவ்வித வரலாற்றுத் திரிபுகள், சிதைவுகள், ஏற்ற-இறக்கங்கள், இகழ்ச்சி-புகழ்ச்சி போன்றவை இல்லாமல் உள்ளபடியே இதில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பு என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.


ரோயல் சபையின் இணையத்தளத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் இம்மூலப் பிரதி பார்வைக்கு வந்துள்ளது. இணையத்தளம்: [1]

மூலம்