நிக்கோபார் தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஞாயிறு, சூன் 13, 2010


இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் (USGS) அறிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இன்று ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:26:35 (சனிக்கிழமை 19:26:35 UTC) இடம்பெற்றுள்ளது.

Shakemap of the earthquake

இந்த நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிக்கோபார் தீவுகளில் மோகீன் என்ற இடத்துக்கு 150 கிலோமீட்டர் மேற்கே மையம் கொண்டிருந்தது. இது சுமாத்திராவுக்கு 440 கிமீ வடமேற்கேயும், பாங்கொக்கிற்கு 1155 கிமீ தென்மேற்கேயும், புதுதில்லிக்கு 2790 கிமீ தென்கிழக்கேயும் அமைந்திருந்தது. 10 முதல் 20 செக்கன்களுக்கு இந்நிலநடுக்கம் உணரப்பட்டது.


இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் கொழும்பு, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கத்திற்கான அறிகுறி உணரப்பட்டிருந்த போதிலும், எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரியந்த கொடிப்பிலி, சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கரையோரப் பிரதேசத்திலுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டார்.

மூலம்

தொகு