நாசாவின் ஹபிள் தொலைநோக்கி நெப்டியூனின் புதிய நிலவு ஒன்றைக் கண்டுபிடித்தது

செவ்வாய், சூலை 16, 2013

நெப்டியூன் கோளைச் சுற்றி வரும் துணைக்கோள் ஒன்றை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.


நெப்டியூனின் நிலவுகள் (படிமம்: நாசா)

எஸ்/2004 என் 1 (S/2004 N 1) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நிலவு நெப்டியூனின் அறியப்பட்ட 14வது நிலவாகும். இதுவே நெப்டியூனின் மிகச் சிறிய நிலவும் ஆகும். 20 கிமீ விட்டம் மட்டுமே கொண்டுள்ள இந்த நிலவு நெப்டியூனை 23 மணித்தியாலத்திற்கு ஒரு முறை சுற்றி வருகிறது.


கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியலாளர் மார்க் ஷோவால்ட்டர் என்பவர் நெப்டியூனைச் சுற்றியுள்ள வளையங்களை ஆராய்ந்த போது இந்தச் சிறிய நிலவைக் கண்டுபிடித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஹபிள் தொலைநோக்கி எடுத்த 150 புகைப்படங்களை ஆராய்ந்த போது இதனை அவர் கண்டுபிடித்தார்.


இது மிகச் சிறியதாக இருந்ததாலேயே 1989 ஆம் ஆண்டில் நாசாவின் வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றபோது இதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


மூலம் தொகு