நவீன ரக செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற உருசிய புரோட்டோன்-எம் ஏவூர்தி வானில் வெடித்தது

வெள்ளி, மே 16, 2014

நவீன ரக செயற்கைக்கோள் ஒன்றைக் காவிச் சென்ற உருசியாவின் புரோட்டோன்-எம் என்ற ஏவூர்தி இன்று வெள்ளிக்கிழமை தனது மூன்றாம் கட்ட ஏவுகையின் போது சீனாவின் வான் பகுதியில் வெடித்து முற்றாக எரிந்தது.


பைக்கனூர் ஏவுதளத்தில் புரோட்டோன்-எம் ஏவூர்தி

கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலையில் ஏவப்பட்ட இவ்வேவூர்தி கிளம்பிய ஒன்பதாவது நிமிடத்தில் வெடித்துச் சிதறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 160 கிமீ உயரத்தில் செக்கனுக்கு 7 கிமீ வேகத்தில் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.


“ராக்கெட், மற்றும் செயற்கைக்கோள் அனைத்தும் வளிமண்டலத்திலேயே முற்றாக எரிந்து விட்டன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீன வான் பரப்பிலேயே இது நிகழ்ந்துள்ளது. இவற்றின் சிதைவுகள் எவையும் புவியை வந்தடையவில்லை என உறுதியாகத் தெரிவிக்க முடியும்," என ரொஸ்கொஸ்மசு தலைவர் ஒலேக் ஒஸ்தாபென்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.


எக்ஸ்பிரசு-ஏஎம்4 ஆர் என்ற செயற்கைக்கோள் ஆஸ்ட்ரியம் என்ற ஐரோப்பிய நிறுவனத்தால் உருசியாவின் 2006-2015 விண்வெளித் திட்டத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இவ்வகையான செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவது இவ்வாண்டில் இது மூன்றாவதாகும். இன்று வெடித்த ஏவூர்தி 7.8 பில்லியன் ரூபிள்களுக்கு (224 மில்லியன் டாலர்கள்) காப்புறுதி செய்யப்பட்டிருந்ததாக ஏவூர்தியத் தயாரித்த குருனிச்சேவ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில், புரோட்டோன் ஏவூர்தி ஒன்று இவ்வாறு வானில் வெடித்தது.


மூலம் தொகு