நளினியின் விடுதலை மனுவை தமிழக அரசு ஏற்க மறுப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

செவ்வாய், மார்ச்சு 30, 2010

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினியின் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினிக்கு கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகத் தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


நளினியை விடுதலை செய்வது உகந்ததல்ல என்ற சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


பரிந்துரைக் குழுவின் அறிக்கையில் நளினியை விடுவிக்க முடியாது என்பதற்காக 8 காரணங்கள் கூறப்பட்டதாக தமிழ்க அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

  • நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. நளினி கணவரின் சொந்த ஊர் இலங்கை. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம்.
  • நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
  • நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
  • தன்னுடைய குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
  • இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது. அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.


பொதுவாக இந்தியாவில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நன்னடைத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர் விடுதலை செய்யப்படலாம்.


நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இம்மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றன. நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். பின்னர் ஒரு நாள் வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும்.


ராஜீவ் காந்தி கொலைச் சதிக்கு உதவினார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்

தொகு