நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளைப் பதிய பிபிசிக்கு இலங்கை அரசு அனுமதி

திங்கள், நவம்பர் 15, 2010


ஈழப்போர் தொடர்பாக இலங்கை அரசு அமைத்த கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளைப் பதிய பிபிசி செய்தியாளருக்கு முழுமையான அனுமதியை அரசு வழங்கியுள்ளது.


கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு விசாரணைகளைப் பதிவதற்குச் செல்ல பிபிசி செய்தியாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.


உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகள் இடம்பெற்ற நிகழ்வுகளை ஆராய்ந்து அதன் மூலம் வேறொரு உள்நாடுப் போர் நிகழாவண்னம் தடுப்பதே இவ்வாணைக்குழுவின் நோக்கம் என இலங்கை அரசு கூறி வருகிறது.


ஆணைக்குழுவின் நிகழ்வுகளைப் பார்வையிட பிபிசி செய்தியாளருக்கு இரு தடவைகள் அனுமதி மறுக்கப்பட்டது.


எனினும், கடந்த சனிக்கிழமை இந்தத்தடை நீக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக பிபிசிக்கு அறிவிக்கப்பட்டது. இலங்கையின் வடபகுதி முழுமையாக இராணுவ மயப்படுத்தப்படிருந்தாலும், அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது.


வடக்கில் இடம்பெறும் ஆணைக்குழு விசாரணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், வடக்கின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு இப்போதுள்ள தடை நீக்கப்படுமா என்பது குறித்து அறியப்படவில்லை.


இதற்கிடையில், குழந்தைகளுடன் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகளின் குடும்பம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லையென தந்தை ஒருவர் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். க.அமலசிங்கம் என்பவர் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற நிலையில் 2009 மே 19 ஆம் திகதி எனது மகளும் மருமகனும் தமது ஒன்றரை வயது, 6 வயது குழந்தைகளுடன் அருட்தந்தை பிரான்சிஸ் சகிதம் இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால், இன்றுவரை எனது மகளின் குடும்பம் குறித்த எந்தவொரு தகவலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார்.


மூலம் தொகு