நமக்குக் கிட்டவுள்ள ’சூரியனை ஒத்த' விண்மீன் ஐந்து கோள்களைக் கொண்டுள்ளது

வியாழன், திசம்பர் 20, 2012

நமக்கு மிகக் கிட்டவாகவுள்ள "நமது சூரியனை ஒத்த" தாவு செற்றி (Tau Ceti, τ Ceti) என்ற விண்மீன் தன்னகத்தே ஐந்து கோள்களைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் ஒன்று உயிரினம் வாழக்கூடிய வலயத்தில் உள்ளதாகவும் வானியலாளர்கள் கண்டுள்ளனர்.


இது குறித்த ஆய்வு முடிவுகள் வானியல், மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறைகள் மேலும் பல உலகங்களைக் கண்டறிய உதவும் என நம்பப்படுகிறது.


நமக்குக் கிட்டவுள்ள கோள்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும் அல்பா-சென்டோரி விண்மீனுடன் தாவு செற்றியும் இணைகிறது. தாவு செற்றி 12 ஒளியாண்டுகள் தூரத்திலேயே காணப்படுகிறது. அல்பா சென்டோரி 4 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. கோள்கள் அவற்றின் விண்மீன்களின் ஒளியில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


தாவு செற்றியின் கோள்கள் பூமியை விட இரண்டு முதல் ஆறு மடங்கு எடை கூடியவை. இவற்றின் சுழற்சிக்காலம் 14 முதல் 640 நாட்கள் ஆகும். இவற்றில் ஒரு கோள், எச்டி 10700இ, உயிரினம் வாழக்கூடிய வலயத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம் தொகு