தென் கொரிய அரசுத்தலைவர் சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அரசு முறைப் பயணம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஆகத்து 10, 2012

சப்பான் உரிமை கோரும் சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு தென் கொரிய அரசுத்தலைவர் திடீர்ப் பயணம் மேற்கொண்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளைப் பாதித்துள்ளது.


டொக்டோ தீவுகள் (Liancourt Rocks)

ஆங்கிலத்தில் Liancourt Rocks எனவும் தென் கொரியாவினால் டொக்டோ எனவும் சப்பானினால் தக்கெசீமா எனவும் அழைக்கப்படும் தீவுகளுக்கு தென் கொரிய அரசுத்தலைவர் லீ மியுங்-பாக் சென்றுள்ளார். தென் கொரிய அரசுத்தலைவர் ஒருவர் இத்தீவுகளுக்குச் செல்வது இதுவே முதற் தடவையாகும். இதனை அடுத்து சப்பான் தென் கொரியாவுக்கான தனது தூதுவரைத் திரும்ப அழைத்துள்ளது.


இத்தீவுகளுக்கு வரலாற்று ரீதியாக தாம் உரிமை கொண்டாடுவதாக இரு நாடுகளும் கூறிவருகின்றன. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் ஏறத்தாழ நடுவில் உள்ள இந்தத் தீவுகள் மிகச் சிறியதானாலும், மீன்பிடி வளங்கள் நிறைந்ததாகவும், பெரும் வளிமப் படிவுகளையும் கொண்டுள்ளன. தென் கொரியா தனது கடலோரக் காவல்படையை 1954 முதல் அங்கு நிறுத்தியுள்ளது.


இத்தீவுகளுக்கு சப்பான் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க சென்ற மாதம் தென் கொரிய நபர் ஒருவர் தமது பாரவூர்தியை சியோல் நகரத்தில் அமைந்துள்ள சப்பானிய தூதரகத்தினுள் அதன் வாயிற்கதவைத் தகர்த்துக் கொண்டு செலுத்தியுள்ளார்.


1945 ஆம் ஆண்டில் சப்பானிய ஆதிக்கவாதிகளிடம் இருந்து தென் கொரியா விடுதலையான நினைவு நாள் ஆகத்து 15 ஆம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மூலம்

தொகு