தென் கொரியாவிலிருந்து வெளிநாட்டினர் வெளியேறவேண்டும்: வட கொரியா எச்சரிக்கை

செவ்வாய், ஏப்பிரல் 9, 2013

போர் மூளும் பட்சத்தில் தென் கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.


வட-தென் கொரிய எல்லையில் அமைந்திருக்கும் படைகளகற்றைய வலயம்

வட கொரியாவின் ஆசிய-பசிபிக் அமைதிக் குழு இன்று விடுத்துள்ள அறிக்கையில், "கொரியத் தீபகற்பத்தில் தற்போதுள்ள நிலைமை ஒரு வெப்ப-அணுவாயுதப் போருக்கு கொண்டு செல்கிறது" எனத் தெரிவித்துள்ளது. "போர் மூளும் பட்சத்தில், வெளிநாட்டவர் எவரும் பாதிப்படைய நாம் விரும்பவில்லை. அனைத்து வெளிநாட்டு அமைப்புகள், தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நாம் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்" என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.


கொரியப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் தென் கொரிய, அமெரிக்க மற்றும் சப்பானியத் தளங்கள் மீது போர்த் தாக்குதல் நடத்தவிருப்பதாக வட கொரியா முன்னதாக அச்சுறுத்தியிருந்தது. சப்பான் தனது தலைநகரில் வசிக்கும் 30 மில்லியன் மக்களைக் காக்கவென ஏவுகணை-எதிர்ப்பு மின்கலங்களை டோக்கியோவின் மூன்று இடங்களில் பொருத்தியிருக்கிறது. சப்பானியத் தீவுகளுக்கு மேலாக வட கொரியா ஏவுகணைகளை ஏவும் பட்சத்தில் அவற்றை உடனடியாகச் சுட்டு வீழ்த்தும் வகையில் சப்பான் கடந்த வார இறுதியில் தனது நவீனப் போர்கப்பல்கள் இரண்டை சப்பானியக் கடலுக்கு அனுப்பியிருந்தது.


எந்தவொரு வெளிநாட்டுத் தூதரகமும் நாட்டை விட்டு வெளியேற இதுவரையில் தீர்மானிக்கவில்லை. அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு அங்கு உடனடியான அச்சுறுத்தல் இல்லை என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.


வட கொரியாவில் அமைந்திருக்கும் படைகளகற்றிய வலயத்தில் உள்ள கேசோங் தொழிற்துறை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியப் பணியாளர்கள் எவரும் பணிக்குச் செல்லவில்லை. இதன் மூலம் தென் கொரியாவுடனான ஒரேயொரு தொடர்பு தடைப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் தென் கொரியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் படி, இவ்வளாகத்தில் 123 தென் கொரிய வணிக நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இங்கு திறந்துள்ளன. இவற்றில் ஏறத்தாழ 53,000 வட கொரிய ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது ஊதியம் அனைத்தும் நேரடியாக வட கொரிய அரசுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் ஏப்ரல் 3 ஆம் நாள் தென் கொரியர்கள் இங்கு வருவதற்கு வட கொரியா தடை விதித்தது. அத்துடன் அங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடிவிட உத்தரவிட்டது.


வட கொரியாவின் மூன்றாவது அணுவாயுதச் சோதனையை அடுத்து கடந்த மாதம் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.


மூலம் தொகு