தென்சீனக் கடல் பகுதிக்கான உரிமை தொடர்பான சர்ச்சை விரிவடைகிறது

திங்கள், திசம்பர் 3, 2012

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் தனது பிரதேசம் என உரிமை கோரும் சீனா தற்போது அப்பிரதேசத்துக்குள் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் அனைத்தையும் சோதனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருப்பதை பிலிப்பீன்சு நாடு கண்டித்துள்ளது.


தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கோரும் நாடுகளின் எல்லைக் கோடுகள். சீனா தற்போது அனைத்துப் பகுதிக்கும் உரிமை கோருகிறது.

"சீனாவின் இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது, தென்சீனக் கடல் பிரதேசத்தின் முழுப் பகுதிக்கும் சீனா இவ்வாறு உரிமை கோருவது அனைத்து நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தல்," என பிலிப்பீன்சின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின் இந்தப் புதிய சட்டம், சீனாவின் கைனான் மாகாணத்து எல்லைக் காவல் படையினர் வெளிநாட்டுக் கப்பல்களை வழிமறிக்க, உட்புகுந்து சோதனையிட, பறிமுதல் செய்ய, மற்றும் வெளியேற்ற வழி செய்கிறது.


ஆட்சி எல்லை குறித்த தமது உரிமை கோரலை சுமுகமாகத் தீர்த்து வைக்க பிலிப்பீன்சு ஏனைய நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரால்ட்டி தீவுகளுக்கு உரிமை கோரும் ஏனைய நாடுகளான வியட்நாம், மலேசியா, புருணை ஆகிய நாடுகளுடன் பிலிப்பீன்சு இம்மாதம் இது குறித்துப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளது. இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது. சீன மக்கள் குடியரசும், சீனக் குடியரசும் இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது.


இதற்கிடையில் எண்ணெய் வளம் அதிகம் காணப்படும் இப்பிரதேசத்தில் 2015 ஆம் ஆண்டுக்குள் ஆண்டொன்றுக்கு 15 பில்லியன் கனமீட்டர் இயற்கை வாயுவை அகழ்ந்தெடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாடு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் இப்பிரதேசத்தில் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.


மூலம் தொகு