துருக்கியில் ஏற்பட்ட 7.2 அளவு நிலநடுக்கத்தில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. 1 pending change awaits review.

திங்கள், அக்டோபர் 24, 2011

துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள வான் என்ற நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இதுவரையில் இருநூறுக்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


வான் நகர நிலநடுக்கத்தின் தாக்கம் (அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம்)

துருக்கியின் கிழக்குப் பகுதியில் வான் மாகாணத்தில் உள்ளூர் நேரம் 13:41 மணிக்கு 20கிமீ ஆழத்தில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் அங்காராவிலிருந்து 1,200 கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதியில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.


குர்து இன மக்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொலைத்தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சம்பவ இடங்களை அடைய முடியவில்லை என வான் நகர மேயர் பெகிர் காயா கூறியுள்ளார்.


அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 அலகுகள் பதிவானதாகவும், பின்னர், மூன்று மணி நேரங்களுக்குள் 8 முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இரண்டு முறை 5.6 அலகுகளாகப் பதிவானது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 கிலோ மீட்டர் ஆழத்திலும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கி புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் நிலநடுக்கத்துக்கு பின், இலிகாய்நாக், கெடிக்புலாக் கிராமங்களில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.


கட்டட இடிபாடுகளிலிருந்து ஏராளமானவர்களின் குரல்கள் கேட்பதாக வான் நகர அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். அருகில் உள்ள மாகாணங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி பிரதமர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு பூகம்பம் குறித்து ஆய்வு செய்தார். இதனிடையே புவியியல் நிறுனத்தின் தலைவரான பேராசிரியர் முஸ்தபா இர்டிக், இஸ்தான்புல் நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் லெந்து கொண்டு கூறுகையில், துருக்கியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் 500 முதல் ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என தெரிவித்தார்.


துருக்கி முக்கிய பிளவுப் பெயர்ச்சிக்கோட்டின் மேல் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். 1999-ல் துருக்கியின் வடமேற்குப் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 20,000 பேர் உயிரிழந்தனர். வான் பகுதியில் உள்ள கால்திரான் பகுதியில் 1976-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,840 பேர் உயிரிழந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு