தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

சனி, ஏப்பிரல் 3, 2010

பார்வையற்ற 95 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு. கருணாநிதி நேற்று வழங்கினார்.


இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:


மனித சமுதாயத்தில் காது கேளாதவராவும் - கண் தெரியாதவராவும்- வாய் பேச முடியாதவர்களாவும் - கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாவும் - மன நோயாளிகளாவும் உள்ள அனைவரையுமே ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக, ஓர் அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றைய திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் அவர்களை “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கின்ற முறை 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


அதன்படி, தமிழகத்தில் "ஊனமுற்றோர்" என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், "மாற்றுத் திறனாளிகள்" என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கலைஞர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "மாற்றுத் திறனாளிகளுக்கான தனித் துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்" என அறிவிக்கப்பட்டதற்கேற்ப தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை" எனும் புதிய துறை உருவாக்கப்பட்டு, அத்துறையின் செயலாளராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.


இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் நியமனம் வழங்குவதிலும் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை 2006ஆம் ஆண்டிற்குப்பின் இதுவரை 56 ஆயிரத்து 225 ஆசிரியப் பெருமக்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 236 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும், 549 கைகால்களில் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளும் ஆசிரியர்களாக நியமனம் செடீநுயப்பட்டுள்ளனர். மேலும், சமூக நலத்துறையின் சிறப்புத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 300 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் இனச்சுழற்சி விதிகளைத் தளர்த்தி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிநியமனம் செய்திட அரசு சிறப்பு அனுமதி வழங்கியதன்பேரில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 187 பேர் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். ஆக 2006-க்குப்பின் இதுவரை, 470 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் 549 கை கால்களில் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளிகளும் என மொத்தம் 1019 பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இத்துடன், தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வழங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் ஒருசேர கண்ட முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அவர்கள் அனைவருக்கும் தாமே நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார். இன்று பணி நியமன ஆணைகள் பெற்ற 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் 68 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் ஆவர். இந்த 95 மாற்றுத் திறனாளிகளுடன் சேர்த்து தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை, 29 பேர் முதுகலை ஆசிரியர்களாகவும், 856 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும், 22 பேர் ஆசிரியப் பயிற்றுநர்களாகவும், 227 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும் என மொத்தம் 1114 மாற்றுத் திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்

தொகு