தமிழ்நாட்டில் தொடருந்து தண்டவாளம் தகர்ப்பு

ஞாயிறு, சூன் 13, 2010

தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் மற்றம் பேரணி ஆகிய தொடருந்து நிலையங்களுக்கிடையே உள்ள பாதையில் நேற்று அதிகாலை நேரத்தில் குண்டு வெடித்து தண்டவாளம் சிதறியது.


ஆனாலும் சரியான நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் விழித்துக் கொண்டதால் திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த மலைக்கோட்டை விரைவு தொடருந்து தப்பிவிட்டது.


சேலத்திலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த விரைவு வண்டி, முண்டியம்பாக்கம் நிலையத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், சித்தனி என்ற இடத்தில் தண்டவாளத்தில் பெரும் அதிர்வு உணரப்பட்டது. அதையடுத்து, தொடருந்து நிறுத்தப்பட்டது.


அதனை அடுத்து, திருச்சியிலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த மலைக்கோட்டை விரைவு வண்டிக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டது.


இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் துண்டுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்த்னர். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக மாநிலக் காவல்துறையினர் சொல்கிறார்கள்.


இத்துண்டுச் சீட்டுக்களில் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச சமீபத்தில் இந்தியா வந்ததைக் கண்டித்தும், அவரை வரவேற்ற இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இருந்தாலும் “இந்தச் சம்பவத்தில் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை. உள்ளூர்க்காரர்கள் தான் காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்,” என்று தமிழக காவல்துறைத் தலைமை அதிகாரி லத்திகா சரண் தெரிவித்தார்.

மூலம் தொகு