தமிழக புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஜெயலலிதா முடிவு

சனி, ஆகத்து 20, 2011

தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.


தி.மு.க., ஆட்சியில், 450 கோடி ரூபாய் செலவில் புதிய செயலகம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி புதிய சட்டசபை வளாகத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கட்டடத்தையே அதிநவீன மருத்துவமனையாக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், தரமான உயரிய சிகிச்சையை இலவசமாக பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார். இதற்கு அருகில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அறிவித்தார்.


"புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பில், எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ, கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல," என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.


மூலம் தொகு