தமிழக அரசின் தொழில் வணிகத்துறை அலுவலகத் தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சனவரி 17, 2012

சென்னை சேப்பாக்கத்தில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்கள் இயங்கி வந்த புராதனக் கட்டிடமொன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீயினை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர்.


பல அரசு அலுவலகங்களை உள்ளடக்கிய எழிலகம் வளாகத்தினையொட்டி அமைந்துள்ள சேப்பாக்கம் அரண்மனைக் கட்டிடத் தொகுதியில் வணிகத்துறை அலுவலகத்திலேயே முதலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கும் தீ பரவியது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.


ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய ஒரு தீயணைப்பு வீரர் அதே இடத்தில் இறந்தார். அவரை மீட்பதற்குச் சென்ற மூவர் படுகாயம் அடைந்தனர். பிறகு அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இந்தத் தீயில் அரசு அலுவலகங்களின் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. எனவே, இது விபத்தா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சதியா என சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், பொங்கல் நாள் விடுமுறையை ஒட்டி, அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை என்பதால் எழிலகக் கட்டிடமே வெறிச்சோடியிருந்தது. இரவில் தங்கிப் பணிபுரியும் பணியாளர்களும் இல்லாத நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆனால், மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சத்துணவு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கே.கோபால் கட்டிடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் அரசு துறை அலுவலகங்களை வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எரிந்து போன ஆவணங்களின் நகல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே அவ்வகையில் பாதிப்பு எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார்.


மூலம்

தொகு