தமிழகப் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை அறிமுகம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், செப்டெம்பர் 29, 2011

எதிர்வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை‎ (கிரேடு முறை) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளிலும் இந்த தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை‎ அமலுக்கு வரும்.


ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், சூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், சனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைக்கேற்பவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுகளில் கிரேடு முறை அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர். ஆனாலும், ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவ, மாணவியின் செயல்பாட்டிலும் கவனம் செலுத்தி, பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் ஒருவர் தினமலர் செய்தியாளரிடம் தெரிவித்தார். "ஆசிரியர்களின் கையில், 40 மதிப்பெண்கள் வழங்கும் பொறுப்பு இருப்பதால், தேவையான மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களும், பிடிக்காத மாணவர்களுக்கு குறைத்து மதிப்பெண்கள் வழங்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் நேர்மையான முறையில், மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்யாவிட்டால், மாணவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும்," என அவர் தெரிவித்தார்.


மூலம்

தொகு