தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, நவம்பர் 8, 2015

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், சென்னைக்கு தென்கிழக்கே ஏறத்தாழ 450 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்தத் தாழ்வு மண்டலம், நாளை சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.


பாண்டிச்சேரி மீன்பிடித் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கன மழைக்கான முன்னறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.


சென்னையில் பலத்த மழை

இன்று இரவு 8.30 மணியோடு முடிவடைந்த 12 மணி நேர காலகட்டத்தில், சென்னையில் 7 செ. மீ. அளவிற்கு மழையளவு பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தளவில் இது ஒரு குறிப்பிடத்தக்க மழையளவாகும். தீபாவளிக் கொண்டாட்ட நாளுக்கு இன்னமும் ஒரேஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், மக்கள் சிரமப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்

தொகு