டென்மார்க் தேர்தலில் சமூக சனநாயகக் கட்சி வெற்றி
சனி, செப்டெம்பர் 17, 2011
- 17 செப்டெம்பர் 2011: டென்மார்க் தேர்தலில் சமூக சனநாயகக் கட்சி வெற்றி
கடந்த வியாழக்கிழமை டென்மார்க்கில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சமூக சனநாயகக் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றியின் மூலம் அக்கட்சியின் தலைவர் ஹெல்லி தோர்னிங்-சிமித் (44) டென்மார்க்கின் முதலாவது பெண் பிரதமராகப் பதவியேற்க விருக்கிறார்.
டென்மார்க் கடந்த 10 ஆண்டுகாலமாக வலதுசாரி ஆட்சியில் இருந்து வந்துள்ளது. தற்போதைய பிரதமர் லார்ஸ் லொக்கி ரஸ்முசன் தமது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். தனது அரசின் பதவி விலகலை இராணியிடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
179 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிக் கூட்டணி 89 இடங்களை வென்றுள்ளது.
ஹெல்லி தோர்னிங்-சிமித் வரிகளை அதிகரித்தல், கல்வி மற்றும் பொதுநலச் செலவினத்தை அதிகரித்தல் போன்றவற்றை தமது தேர்தல் பிரசாரத்தில் முன் வைத்திருந்தார். அத்துடன், நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான குடிவரவுச் சட்டங்களை நீக்கவும் உறுதி அளித்துள்ளார். ஒரு நாள் வேலை நேரத்தை 12 நிமிடங்களால் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் டென்மார்க் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவை எதிர் கொண்டுள்ளது. 2008 இல் ஒன்பது வங்கிகள் அரச உடமையாக்கப்பட்டன.
புதிய பிரதமர் பிரித்தானியாவின் முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் நீல் கினொக்கின் மருமகள் ஆவார். 1999 இல் இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 இல் சமூக சனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூலம்
தொகு- "Denmark's Thorning-Schmidt set to be first female PM". யாஹூ!, செப்டம்பர் 16, 2011
- "Denmark's "Red bloc" defeats centre right". ராய்ட்டர்ஸ், செப்டம்பர் 16, 2011
- "Helle Thorning-Schmidt to be Danish PM after poll win". பிபிசி, செப்டம்பர் 16, 2011