டானியல் ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக நிக்கராகுவாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், சனவரி 11, 2012

கடந்த ஆண்டு நவம்பர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற டானியல் ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக நிக்கராகுவாவின் அரசுத் தலைவராகப் பதவியேற்றார்.


டானியல் ஒர்ட்டேகா

முன்னாள் சண்டினிஸ்டா கெரில்லா தலைவரான ஒர்ட்டேகா அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சிக் காலத்தில் பெருமளவு அரசியல் மாற்றம் எதுவும் இடம்பெற மாட்டாது என உறுதியளித்தார். தலைநகர் மனாகுவாவில் நடந்த பதவியேற்பு நிகழ்வுகளில் முக்கிய எதிர்க்கட்சி பங்குகொள்ளவில்லை. தேர்தல்கள் முறைகேடாக நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெனிசுவேலாவின் தலைவர் ஹூகோ சாவேசு, ஈரானிய அரசுத் தலைவர் மகுமுத் அகமதினிஜாத் உட்படப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


தேர்தலில் 62 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஒர்ட்டேகா (அகவை 66) வெற்றி பெற்றார். அவர் சார்ந்திருக்கும் சண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி (FSLN) நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியலமைப்பை மாற்றியமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.


பனிப்போரின் உச்சக்கட்டத்தில் கூபா, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் துணையுடன் ஒர்ட்டேகா ஆட்சிக்கு வந்தார். பின்னர் 1990 தேர்தல்களில் தோல்வியடைந்தவர் 17 ஆண்டுகால வலதுசாரி ஆட்சிக்குப் பின்னர் மீண்டும் 2007 ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார்.


இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனாலும், இப்பிராந்தியத்தில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் அது கணிக்கப்பட்டுள்ளது.


மூலம்

தொகு