ஜெயலலிதா மீது அவதூறு செய்தியை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

ஞாயிறு, சனவரி 8, 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து நக்கீரன் பத்திரிகை அவதூறாக செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அந்த பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மீது அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். இதில் அலுவலக கண்ணாடி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


இதனை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அ.தி.மு.க கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்" என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழையே இவ்வாறு தீ வைத்தனர். நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது.


இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில், காவல்துறைக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார். நேற்று பிற்பகலுக்குப் பின்பும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. அதனை விட்டு இவ்வாறான செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்தி வெளியிட்ட வார இதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் நேற்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் சங்கங்கள் கூறுகையில், தனிப்பட்ட முறையில் தரக்குறைவான விமர்சனங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன.


மூலம் தொகு