ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடருந்து தீப்பற்றியதில் ஒரு ஆஸ்திரேலியர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
செவ்வாய், நவம்பர் 22, 2011
இந்தியாவின் கிழக்க்கே ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து தீப்பற்றியதில் ஒரு ஆஸ்திரேலியர் உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டேராடூனில் இருந்து ஹௌரா நோக்கிச் சென்று கொண்டிருந்த டூன் கடுகதித் தொடருந்தின் இரண்டு பயணிகள் பெட்டிகள் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டன. தீக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டே தீப்பற்றிக்கொண்டுள்ளன.
தீயினால் மிகவும் சேதமுற்றிருந்த பெட்டிகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 வயதுச் சிறுமியும் ஒருவரும் இறந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்ற நான்கு பெண் ஆய்வாளர்கள் புத்த காயா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பிராந்திய ரெயில்வே அதிகாரி சுதிர் குமார் ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இவர்களில் ஒருவர் இறந்துள்ளதாகவும், ஏனைய மூவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களில் ஒருவர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
யாரோ ஒருவர் குளிரூட்டிய அணைத்து விட்டு சூடாக்கியை இயக்கச் செய்த போது தீப்பற்றியதாகப் பயணி ஒருவர் தெரிவித்தார். விபத்து இடம்பெற்று இரண்டு மணி நேரத்தின் பின்னரே மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர் எனப் பயணிகள் தெரிவித்தனர்.
மூலம்
தொகு- Australian dies in Indian train fire, சிட்னி மோர்னிங் ஹெரால்ட், நவம்பர் 22, 2011
- India train fire kills seven in Jharkhand, பிபிசி, நவம்பர் 22, 2011