ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, சனவரி 9, 2016

தமிழகத்தில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி, முதன்மையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு (ஏறுதழுவல் விளையாட்டு) போட்டிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராட்டிரா, பஞ்சாப், அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டுவண்டி போட்டிகள் காட்சிப்படுத்தப்படும் கால்நடைகளாக பயிற்றுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறவேண்டுமெனவும், மாட்டுவண்டி போட்டிகள் பொறுத்தமட்டில், 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மிகாமலும், சரியான பாதைகளில் அப்போட்டிகள் நடத்தப்படவேண்டுமெனவும், ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிபடவேண்டுமெனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளை நடத்தும் முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளைப் பரிசோதிக்கவும், அவற்றிற்கு மருந்துகளேதும் புகுத்தப்பட்டுள்ளதாவெனவும், மிருகவதைக்கெதிரான மாவட்டக் கமிட்டியும், மாவட்ட விலங்குகள் நலவாரியமும் கண்காணிக்க வேண்டுமென்று அச்செய்திக் குறிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, 11/07/2011-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைமாட்டை இணைத்திருந்தது, பின்பு 2014 மே 7-ஆம் திகதி, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. இதனால் 2015-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

தற்போதும் மத்திய அரசு, விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்காதபோதும், 2016-ன் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மத்திய அரசு தமிழக ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பினை தமிழக மக்களும், கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், விலங்குகள் நலம் மற்றும் ஆதரவு அமைப்பான "பெடா" கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மூலம்

தொகு