சோழர்களின் பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டன

ஞாயிறு, சூன் 20, 2010

பிற்காலச் சோழர்களின் வரலாறு அடங்கிய செப்பேடுகள் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.


மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. கருணாநிதியின் பார்வைக்காக வைத்தனர். "இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம்," என்று மு.கருணாநிதி கூறியுள்ளார்.


கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.


முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் இரா.நாகசாமி தெரிவித்தார்.


தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிருத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராசேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாம் ராசேந்திரசோழன் வெளியிட்டுள்ளான்.


இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பது போல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.

மூலம்

தொகு