சோயுஸ் விண்கலம் 6 மணி நேரத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை

வெள்ளி, மார்ச்சு 29, 2013

உருசியாவின் சோயுஸ் விண்கலம் ஆறு மணித்தியாலங்களுக்கும் குறைவான பயண நேரத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.


இரண்டு உருசியர்கள், ஒரு அமெரிக்கர் ஆக மூன்று பேருடன் சென்ற விண்கலம் நான்கு சுற்றிலேயே கடுகதிப் பயணமாக விண்வெளி நிலையத்தை அடைந்தது. பொதுவாக உருசிய விண்கலம் ஒன்றுக்கு இப்பயணம் 2 நாட்கள் எடுக்கக்கூடியது.


கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் சென்ற பவெல் வினொகிராதொவ், அலெக்சாண்டர் மிசூர்க்கின், கிறிஸ் காசிடி ஆகியோர் விண்வெளி நிலையத்தில் செப்டம்பர் மாதம் வரை தங்கியிருப்பர். இவர்களுடன் சேர்த்து விண்வெளி நிலையத்தில் தற்போது ஆறு வீரர்கள் தங்கியுள்ளனர். ஏனைய மூவரும் இவ்வாண்டு மே மாதத்தில் புவிக்குத் திரும்புவர்.


இக்குறுகிய காலப் பயணம் ஏற்கனவே மூன்று முறை உருசியாவின் புரோகிரஸ் திட்டத்தின் மூலம் ஆளில்லாமல் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருந்தது.


அடுத்த ஆறு மாத காலத்தில் விண்வெளி வீரர்கள் 137 பரிசோதனைகளை விண்வெளி நிலையத்தின் அமெரிக்கப் பகுதியில் மேற்கொள்வர் என்றும், 44 பரிசோதனைகளை உருசியப் பகுதியில் மேற்கொள்ளுவர் என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அறிவித்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு