சோமாலிலாந்தின் எதிர்காலம் குறித்து பிரித்தானியாவில் பேச்சுவார்த்தை

வெள்ளி, சூன் 22, 2012

தன்னாட்சிக்கான விடுதலையை அறிவித்த சோமாலிலாந்துக் குடியரசின் எதிர்காலம் குறித்து சோமாலியா மற்றும் சோமாலிலாந்து தலைவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் லண்டனில் முதற்தடவையாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.


1991 ஆம் ஆண்டில் பிரிவினையை அறிவித்த சோமாலிலாந்து ஒரு தனிநாடாக விரும்புகிறது, ஆனாலும் இதுவரையில் எந்த நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை. சோமாலியா இந்த வடக்குப் பிரதேசத்தைத் தன்னுடன் வைத்திருக்கவே விரும்புகிறது.


விடுதலையை அறிவித்த நாள் முதல் சோமாலியாவின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது சோமாலிலாந்தில் கூடுதல் அமைதி நிலவி வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலிலாந்து சோமாலியாவுடன் 1960 சூலை 1 இல் இணைவதற்கு முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்து வந்துள்ளது, அதேவேளையில் சோமாலியாவின் ஏனைய பகுதிகள் இத்தாலியக் குடியேற்ற நாடாக இருந்துள்ளது.


நேற்றைய பேச்சுக்களின் முடிவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் விரைவில் சந்தித்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதென முடிவாகியுள்ளது. இச்சந்திப்பு அடுத்த வாரம் துபாயில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்புக் குறித்து நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு பன்னாட்டு சமூகங்களிடம் இருந்து உதவிகளைக் கேட்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சோமாலியாவில் தற்போதுள்ள தீவிரவாதிகள், மற்றும் கடற்கொள்ளையர் பிரச்சினைகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்தும் ஆராயப்பட்டது.


பிரித்தானியா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இரு தரப்பும் கூடிய விரைவில் தீர்வு ஒன்றை எட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றன.


சோமாலியாவின் இடைக்கால அரசின் பதவிக்காலம் இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் முடிவுக்கு வரும் நிலையில், அது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசுத்தலைவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.


சோமாலியாவின் கடைசி தேசிய அரசின் தலைவர் சியாட் பாரே பதவியில் இருந்து இறக்கப்பட்டதை அடுத்து சோமாலிலாந்து தன்னாட்சியை அறிவித்திருந்தது. சோமாலியாவின் ஏனைய பகுதிகளைப் போலல்லாமல் அங்கு சனநாயக முறையில் தேர்தல்கள் ஒழுங்காக நடைபெற்று மக்களாட்சி இடம்பெற்று வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம் தொகு