சோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு

வியாழன், ஏப்பிரல் 15, 2010

சோமாலியாவில் பெரும்பாலான வானொலி நிலையங்கள் பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட இசைகளை ஒலிபரப்புவதை இடைநிறுத்தியுள்ளன. பாடல்கள் இசுலாமியப் பண்பாட்டுக்கு ஒத்துவராதவை என்றும் அவற்றை ஒலிபரப்ப வேண்டாம் என்றும் இசுலாமியப் போராளிகள் விடுத்த அழைப்பை ஏற்றே இவானொலி நிலையங்கள் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தியுள்ளன. தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியே தாம் பாடல்களை நிறுத்தியுள்ளதாக வானொலி நிலையங்கள் தெரிவித்துள்ளன.


நாட்டில் உள்ள 15 வானொலி நிலையங்களில் 13 நிலையங்கள் முன்னர் அனைத்து வகை இசையையும் ஒலிபரப்பி வந்துள்ளன. "இப்போது நாங்கள் வேறு வகை ஒலிகளை, குறிப்பாக, சூட்டுச் சத்தம், வாகனக்களின் சத்தம், பறவைகளின் ஒலி போன்றவற்றை நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒலிபரப்புகிறோம்," என வானொலி நிலையம் ஒன்றின் மேலதிகாரி தெரிவித்தார். இத்தடையினால் வானொலி கேட்போர், மற்றும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறையும் என அஞ்சப்படுகிறது.


போராளிகள் 10 நாட்களுக்கு முன்னர் இத்தடையை அறிவித்தார்கள். இரண்டு நிலையங்கள் மட்டுமே தற்போது பாடல்களை ஒலிபரப்புகிறது. அரசு வானொலி ஒன்றும், மற்றும் ஐநாவின் ஆதரவில் இயங்கும் வானொலி நிலையம் ஒன்றுமே பாடல்களை ஒலிபரப்புகின்றன.


சோமாலியர்களிடையே பாப் இசை மிகவும் பிரபலமானதாகும். இதனால் இத்தடைக்கு அங்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முன்னர் பல இடஙகளில், திரைப்படங்கள் மற்றும் உதைபந்தாட்டம் போன்றவை போராளிகளால் தடை செய்யப்பட்டன.


1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் அரசு இயந்திரம் இயங்காமல் உள்ளது. போராளிகள் நாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். ஐநாவின் ஆதரவுடன் இயங்கும் அரசாங்கம் தலைநகர் மொகதிசுவின் சில பகுதிகளை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

மூலம்

தொகு