சோமாலியா உணவகத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழந்தனர்

வியாழன், பெப்பிரவரி 9, 2012

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உணவகம் ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று நேற்று புதன்கிழமை வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.


இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என காவல்துறை ஆணையர் கூறினார். தாக்குதலுக்குள்ளான மூனா உணவகத்திற்கு சோமாலிய அரசியல்வாதிகள் அடிக்கடி வருவர் என்று கூரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டிலும் இங்கு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல அரசு அதிகாரிகள் உட்படக் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர்.


தாமே இத்தாக்குதலை மேற்கொண்டதாக அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாத இயக்கமான அல்-சபாப் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் சோமாலிய அரசுப் படையினராலும், ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையினராலும் தலைநகர் மொகதிசுவில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் அல்-சபாப் இயக்கம் இவ்வாறான தற்கொலைத் தாக்குதல்கலை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது.


ஆப்பிரிக்கக் கொம்புப் பகுதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சிறப்புத் தூதர் அலெக்சாண்டர் ரொண்டோசு நேற்று மொகதிசுவுக்கு வருகை தந்த நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஏக் மொகதிசுவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.


சோமாலியாவில் அரசியல் தீர்வைக் கொண்டு வரும் முகமாகவும், கடற்கொள்ளைக்காரர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும், லண்டனில் பெப்ரவரி 23 ஆம் நாள் பன்னாட்டு மாநாடு ஒன்றை பிரித்தானியா ஒழுங்கு படுத்தியுள்ளது.


மூலம் தொகு