சோமாலியத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், ஆகத்து 24, 2010

சோமாலியாவின் அரசுத்தலைவர் மாளிகைக்கு அருகில் உள்ள விடுதியொன்றை இன்று செவ்வாய்க்கிழமை இசுலாமிய ஆயுததாரிகள் தாக்கியதில் அங்கு தங்கியிருந்த சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல அரசு அதிகாரிகள் உட்படக் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாக ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


ஆயுததாரிகள் மூனா விடுதியின் காவலதிகாரியை முதலில் தாக்கியதாகவும், பின்னர் ஆயுததாரி ஒருவர் உள்ளே நுழைந்து தன்னுடன் எடுத்துச் சென்ற குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.


இசுலாமிய அல்-சபாப் தீவிரவாதிகளுக்கும் இடைக்கால அரசுப் படையினருக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாகச் சண்டை இடம்பெற்றுள்ள நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மூனா விடுதியில் பெரும்பாலும் அரசு அதிகாரிகளே தங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


”இறந்த உடல்கள் விடுதி எங்கும் சிதறப்பட்டுக்” கிடந்ததாக மூனா விடுதியில் தங்கியிருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


இரண்டு நாட்களாக இடம்பெற்ற சண்டையில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதகவும், 130 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "குறைந்தது 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.


அல்-சபாப் போராளிகள் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை அன்று தாக்குதலை ஆரம்பித்தனர். 6,000 அமைதிப்படையினரும் ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து சில மணி நேரத்தில் தாக்குதல் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்

தொகு