சோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை

சனி, ஏப்பிரல் 17, 2010


சோமாலியாவில் ஜவுகார் என்ற நகரில் உள்ள பள்ளிகளில் பாட நேரம் முடிவடைந்ததற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படும் மணி அடிக்கும் வழக்கத்தை அல்-சபாப் என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்பு தடை செய்துள்ளது.


இந்த மணிச் சத்தம் கிறித்தவர்கள் உடையதாகக் கேட்கிறது என அல்-சபாப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.


சென்ற வாரம் இஸ்புல் இசுலாம் என்ற அமைப்பு நாடு முழுவதும் பாடல்கள், மற்றும் இசையை வானொலிகளில் ஒலிபரப்பத் தடை விதித்திருந்தது.


நாங்கள் பாடங்கள் நிறைவடைந்ததை இப்போது கைகளைத் தட்டி அறிவிக்கிறோம் என பள்ளி ஆசிரியர் ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


சில ஆசிரியர்கள் மேசைகளிலும், கதவுகளிலும் தட்டி இதனை அறிவிக்கிறார்கள் என அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார்.


முன்னர் திரைப்படங்கள், உதைப்பந்தாட்டம் பார்ப்பது, செல் தொலைபேசிகளில் ஆரம்ப இசை ஒலிபரப்புதல் போன்றவற்றிற்குத் தடை விதித்திருந்தார்கள். அத்துடன், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு கல்லெறிதல், களவெடுப்போருக்கு தடியடி போன்ற தண்டனைகளை வழங்கி வருகிறார்கள்.


கடந்த வாரம், தலைநகர் மொகதிசு உட்பட தெற்குப் பகுதியில் உள்ள 5 நகரங்களில் பிபிசி மறுஒலிபரப்பு நிலையங்களை அல்-சபாப் போராளிகள் மூடியிருந்தனர்.


1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் அரசு இயந்திரம் இயங்காமல் உள்ளது. போராளிகள் நாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். ஐநாவின் ஆதரவுடன் இயங்கும் அரசாங்கம் தலைநகர் மொகதிசுவின் சில பகுதிகளை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு