செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்ட உருசிய விண்கலம் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது

திங்கள், சனவரி 16, 2012

கடந்த நவம்பர் மாதத்தில் செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பப்பட்ட டோபொசு-கிரண்ட் என்ற விண்கலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பசிபிக் பகுதியில் வீழ்ந்து அழிந்ததாக உருசியா அறிவித்துள்ளது.


செவ்வாயின் சந்திரனில் இருந்து பாறைகளை எடுத்து வரும் 33 மாத காலத் திட்டத்துக்காக உருசியா அனுப்பிய இந்த விண்கலம் சரியான திசையில் விண்கலத்தைச் செலுத்தவிருந்த இயந்திரம் செயலிழந்து போனதால் ஏவிய சில நிமிடங்களில் திசை மாறிச் சென்றது. பூமியில் இருந்து அது 345 கிமீ தூரம் அளவே சென்றது.


இவ்விண்கலத்தின் கடைசிப் பயணம் சப்பான், சொலமன் தீவுகளின் மீதாக சென்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் கிழக்குப் பகுதியின் மேல் இருந்தது. கடைசியாக தெற்குக் கடலின் மீதாக சென்றதாகக் கூறப்பட்டது, ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும், இது தென் அமெரிக்காவைக் கடக்க முன்னரே கீழே வீழ்ந்து அழிந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.


13-தொன் எடையுள்ள இவ்விண்கலத்தின் 200 கிகி எச்சமே பூமியில் வீழ்ந்தது என உருசியா விண்வெளி நிறுவனம் ரொஸ்கொஸ்மஸ் அறிவித்துள்ளது.


கடந்த நான்கு மாதங்களில் மூன்று விண்கலங்கள் இவ்வாறு பூமியில் வீழ்ந்துள்ளன.


1960களில் இருந்து உருசியா மொத்தம் 16 விண்கலங்களை செவ்வாயை நோக்கி அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதனால் செவ்வாய்க்கான தனது எதிர்காலத் திட்டங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு உருசியா முயலலாம் என அவதானிகள் கருதுகின்றனர். 2016, 2018 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் எக்சோமார்ஸ் திட்டத்தில் இணைய உருசியாவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு