செருமனியில் வெண்கலக் கால போர்க்களம் கண்டுபிடிப்பு
ஞாயிறு, மே 22, 2011
- 29 அக்டோபர் 2015: 67பி வால்வெள்ளியில் ஆக்சிசன், ரொசெட்டா விண்கலம் கண்டுபிடித்தது
- 6 ஆகத்து 2014: ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியின் சுற்றுவட்டத்தை அடைந்தது
- 14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
- 9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 23 சனவரி 2014: இரண்டரை ஆண்டுகளாக உறக்கத்தில் இருந்த 'ரொசெட்டா' விண்கலம் விழித்தெழுந்தது
செருமனியின் ஆற்றுப் படுகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த மனித எச்சங்கள் வெண்கலக் காலத்தில் இடம்பெற்ற பெரும் போர் பற்றிய மேலும் ஆதாரங்களைத் தரக்கூடும் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு செருமனியில் டொலென்சே பள்ளத்தாக்கில் எலும்புகள் முறிந்த நிலையில் பல மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை கிமு 1200 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என வரலாற்றாய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். எலும்புக் கூடுகளில் காணப்படும் காயங்கள் அக்காலத்தில் இரு வேறு இனக்களிடையே இடம்பெற்ற நேருக்கு நேர் மோதலில் கொல்லப்பட்டவர்கள் உடையதென அவர்கள் நம்புகின்றனர்.
அண்டிக்குவிட்டி என்ற ஆய்விதழில் இது பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. டொலென்சே பள்ளத்தாக்குப் பகுதியில் 2008 ஆம் ஆண்டில் இது குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் எட்டு உடல்களில் காயங்கள் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் இளைஞர்களுடையதாகவும் இருந்தன. ஈட்டிகளால் தாக்கப்பட்டிருப்பதற்கான காயங்களாக அவை இருந்தன. இரண்டு கூரான ஆயுதங்களும் அவற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
"இவ்வுடல்கள் எங்கிருந்து ஆற்றுக்குள் வந்துள்ளன என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும், அதிலிருந்தே இவர்கள் போரில் கொல்லப்பட்டனரா அல்லது சமயச் சடங்குகளின் போது கொல்லப்பட்டவர்களா எனத் தீர்மானிக்கலாம். ஆனாலும் போர்க்களத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நாம் பெரும்பாலும் நம்புகிறோம்," என இவ்வாய்வில் பங்கேற்ற செருமனியில் உள்ள பால்ட்டிக் மற்றும் ஸ்கண்டிநேவிய தொல்லியல் மையத்தின் ஆய்வாளர் ஹரல்ட் லூப்கே தெரிவித்தார்.
மூலம்
தொகு- Early Bronze Age battle site found on German river bank, பிபிசி, மே 22, 2011
- Bronze Age battle site found on German riverbank, டெய்லிநியூஸ், மே 22, 2011