செருமனியின் நாடாளுமன்றம் பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு மூடப்பட்டது

திங்கள், நவம்பர் 22, 2010

செருமனியின் நாடாளுமன்றம் ரெய்க்ஸ்டாக் பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளருக்கு காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


2007 இல் ரெய்க்ஸ்டாக் கட்டடம்

வரலாற்றுப் புகழ் மிக்க இந்த நாடாளுமன்றத்துக்கு நாள் ஒன்றுக்கு 10,000 பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.


அல்-கைடாவுடன் தொடர்புள்ள இசுலாமியப் போராளிகள் ரெய்க்ஸ்டாக் கட்டடத்தைத் தாக்கி பலரைப் பணயக் கைதிகளாக்கத் திட்டன் தீட்டியுள்ளதாக செருமனியின் டேர் ஸ்பைகல் என்ற இதழ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரே இந்தத் தகவலைத் தமக்கு அறிவித்ததாக அது தெரிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் மிகப்பலமுள்ள தீவிரவாதிகள் அறுவர் இத்தாக்குதலை நடத்தவிருப்பதாக அது தகவல் தந்தது.


"குறிப்பிட்ட தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் எம்மிடம் உள்ளன, ஆனால் அவர்கள் எங்கே எப்போது தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்ற விபரம் எமக்கு சரியாகத் தெரியவில்லை," என செருமனியின் நடுவண் அரசு குற்றவியல் திணைக்களத் தலைவர் தெரிவித்தார்.


பொதுமக்களுக்கு நாடாளுமன்ற மூடப்பட்டாலும், வழிகாட்டியுடனான சுற்றுலாக்களை மேற்கொள்ளலாம் என நாடாளுமன்றப் பேச்சாளர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


புனித ரோமப் பேரரசு, வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பு ஆகியவற்றின் நாடாளுமன்றமாக 1945 வரை ரெய்க்ஸ்டாக் கட்டடம் இயங்கி வந்தது. இது 1894 இல் பெர்லினில் கட்டப்பட்டது. 1941 டிசம்பர் 11 இல் இட்லர் இம்மன்றத்தில் தான் அமெரிக்க அதிபர் பிராங்க்லின் டி ரூஸ்வெல்ட் க்கு எதிராக உரையாற்றினார்.


மூலம் தொகு