சென்னையில் 4-வது ஆண்டு இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, சனவரி 28, 2012

இந்து ஆன்மிக சேவை மையம், உலக கலாசார இணக்க மையத்துடன் இணைந்து நடத்தும் நான்காவது ஆண்டு இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி சென்னை அரும்பாக்கம் டி. ஜி. வைஷ்ணவக் கல்லூரியில் சனவரி 25 புதன்கிழமை அன்று துவங்கி சனவரி 29 ஞாயிற்றுக்கிழமை வரை நடந்து வருகிறது.


இந்த கண்காட்சியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, திருமலா-திருப்பதி தேவஸ்தானம், ராமகிருஷ்ணா மடம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம், சத்யசாய் சேவை அமைப்பு உள்பட 160-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன. கண்காட்சியை ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தானந்த சுவாமி தொடங்கிவைத்தார். கோவை சிரவை ஆதீனம் கவுமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இந்து சமய மற்றும் அறநிலையத்துறை செயலாளர் எம்.ராஜாராம், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். ஆன்மிக சொற்பொழிவுகள், திருமுறைப் பாராயணம் போன்றவையும், பரதநாட்டிய நடனம், யோகாசன பயிற்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.


இக்கண்காட்சி குறித்து, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி அமைப்புக்குழு தலைவரும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவருமான எஸ். நடராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் போது, "பல்வேறு அமைப்புகள் ஆன்மிகப் பணிகளில் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், பொருளாதார மேம்பாடு என மக்களுக்கான பல்வேறு சமுதாயப் பணிகளை நிறைவேற்றி வருகின்றன. இந்த அமைப்புகளின் சேவை, ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து விடாமல் நாடு முழுவதும் பரந்து விரிந்து அமைந்துள்ளன. மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகள், பல துறைகளின் நிபுணர்கள், வித்தியாசமான பார்வையாளர்கள், வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டவர்கள் சேவை மனப்பான்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ஒரே நோக்கத்துடன் ஒருங்கிணைந்து சேவை புரிந்து வருகிறார்கள்," எனக் கூறினார்.


"இது போன்ற அமைப்புகளின் சேவையைப் பாராட்டுவதற்காகவும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும், அந்த சேவையில் நாமும் பங்குபெறவேண்டும் என்ற உத்வேகம் அனைத்து தரப்பினரிடமும் வரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் ஆண்டுதோறும் ஆன்மிக கண்காட்சியை நடத்தி வருகிறோம்."


மூலம்

தொகு